Blogger Widgets

செவ்வாய், 16 ஜூலை, 2013

வெள்ளி விழா ஆண்டில் பா.ம.க: வெற்றிகள் விரைவில் குவியும் - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

வெள்ளி விழா ஆண்டில் பா.ம.க: வெற்றிகள் விரைவில் குவியும் - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
=================================================
சென்னை மெரீனாக் கடற்கரை சீரணி அரங்கத்தில், சமூக நீதி, சமத்துவம், சனநாயகம், மனித உரிமை ஆகிய முழக்கங்களுடன் 16.07.1989-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி இன்று 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் 25 ஆண்டு கால அரசியல் பயணத்தை சற்றே பின்னோக்கிப் பார்க்கும் போது, தமிழக மக்களின் நலனுக்காக  ஆற்றிவரும் பணிகள், படைத்த சாதனைகள், நடத்திய போராட்டங்கள் ஆகியவை, பா.ம.க. எதற்காக தொடங்கப்பட்டதோஅந்த நோக்கத்திலிருந்து விலகிச் செல்லவில்லை என்பதை தெளிவாக்குகின்றன.
தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும்  வழங்கப்படும், தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும், அனைத்து மக்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றும்போது குறிப்பிட்டிருந்தேன். அன்று முதல் இன்று வரை இந்த லட்சியங்களை எட்டவும், மக்கள் நலனுக்கான  திட்டங்களை செயல்படுத்தவும், மக்கள் விரோத திட்டங்களை முறியடிக்கவும் பா.ம.க. துடிப்புடன் செயல்பட்டு வருகிறது.
1989-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி அதன்பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதன் செல்வாக்கை அதிகரித்தே வந்திருக்கிறது. 

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை பா.ம.க. இன்னும் பெறவில்லை என்றாலும் ஆட்சியாளர்களின் தோளைப் பிடித்து உலுக்கி மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்தி வந்திருக்கிறது. சென்னை புறநகர் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து துணை நகரம் அமைக்கும் திட்டம், சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஏழை மக்களின் நிலங்களை பறிக்கும் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வளங்களைச் சுரண்டும் வகையில் அமைக்கப்படவிருந்த டாட்டா டைட்டானியம் தொழிற்சாலைத் திட்டம் ஆகியவற்றை முறியடித்து லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்தது- தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுவதற்கு காரணமாக இருந்தது- மக்களை சீரழிக்கும் சாலையோர மதுக்கடைகள் மூடப்படுவதற்கு காரணமாக இருந்தது என எண்ணற்ற நன்மைகளை மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்திருப்பது மிகவும்  மகிழ்ச்சியளிக்கிறது.

1998 முதல் 2009-ஆம் ஆண்டு வரை மத்திய அரசில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்திற்காக எண்ணற்றத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. உலகமே போற்றும் 108 அவசர ஊர்தித் திட்டம், அரசு மருத்துவமனைகளின் அடிப்படையையே மாற்றியமைத்த தேசிய ஊரக சுகாதார இயக்கம், தமிழக மருத்துவத் திட்டங்களுக்கும் எந்த அரசும் செய்யாத வகையில் மொத்தம் ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது, சேலம் மற்றும் மதுரையில் தில்லி எய்ம்ஸ்க்கு இணையான மருத்துவமனைகள், பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை விதித்ததுடன், புகையிலைப் பொருட்களுக்கு முடிவு கட்ட காரணமாக அமைந்தது, தமிழ்நாட்டில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குக் கூட மீட்டர் கேஜ் பாதை இல்லாமல் அனைத்து பாதைகளையும் அகலப்பாதைகளாக்கியது, சேலம் ரயில்வேக் கோட்டம் அமைத்தது என பா.ம.க. சார்பில் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் தமிழக நலனுக்காக செயல்படுத்திய திட்டங்கள் எண்ணிலடங்காதவை. பாட்டாளி மக்கள் கட்சியின்  கைகளில் நிர்வாகம் வழங்கப்பட்டால் அது பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்திய பணிகள் இவை. இவற்றுக்கு காரணமான மருத்துவர் அன்புமணி இராமதாசை அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் முதல் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் வரை பாராட்டியதே இந்த சாதனைகளின் சிறப்பைக் கூறும்.
மக்கள் நலனை நோக்கிய பயணத்தில் பா.ம.க. சாதித்தவை அதிகம் என்ற போதிலும் சில சறுக்கல்களும் இல்லாமல் இல்லை. 1989-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பா.ம.க. தனித்து போட்டியிட்டு அதன் செல்வாக்கை வளர்த்து வந்தது.  அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில், தமிழக மக்களுக்கு துரோகம் செய்த திராவிடக் கட்சிகளுடன்  மாறி மாறி கூட்டணி அமைத்ததன் மூலம் பா.ம.க.வின் வளர்ச்சி தடைபட்டது.
இதை உணர்ந்து தான் இனி வரும்  தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதென 2 ஆண்டுகளுக்கு முன்பு 27.07.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் உறுதியான முடிவு எடுக்கப்பட்டது. அதில் உறுதியாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சி,‘‘புதிய அரசியல் ... புதிய நம்பிக்கை’’ என்ற புதிய பாதையில் வீறு நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் பா.ம.க.வுக்கு ஆதரவு பெருகிவருவதை பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் சக்திகள் நம் மீது அவதூறு குற்றச்சாற்றுகளை சுமத்தின. மரக்காணத்தில் கலவரம் நடத்தியோரை விட்டுவிட்டு, நீதி கேட்டதற்காக என்னையும், 8,000-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினரையும் கைது செய்து மகிழ்ந்தனர் ஆட்சியாளர்கள். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 122 பேரை குண்டர் சட்டம் மற்றும் தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து இன்புற்றனர். இந்த சதி வலைகளை எல்லாம் அறுத்தெரிந்து எழுந்துள்ள  பாட்டாளி மக்கள் கட்சி, இனி வரும் தேர்தல்களில் திராவிட கட்சிகள், தேசியக் கட்சிகள் இல்லாத கூட்டணியை அமைப்பதில் உறுதியாக உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி அதன் 25-ஆம் ஆண்டில்  காலடி எடுத்து வைத்திருக்கும் நிலையில்,  அது சந்தித்து வந்த சோதனைகள் சுக்குநூறாக சிதறுவது உறுதி. வெள்ளிவிழா ஆண்டு நாம் வெற்றிகளை குவிப்பதற்கான அடித்தளமாக அமையும். 25 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் நலனுக்கு எவையெல்லாம் தேவை என பாட்டாளி மக்கள் கட்சி கருதியதோ, அவையெல்லாம் இன்னும் நிறைவேற்றப்படாமல் தான் உள்ளன. 46 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் மது, இலவசம், திரைப்படம் ஆகிய கலாச்சாரங்களால் சீரழிந்த தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் - காலம் இட்ட கட்டளைப்படி 2016-ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றி, திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற இலக்கை நோக்கி எங்களின் பயணம் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக