Blogger Widgets

புதன், 26 ஜூன், 2013

மத்திய அரசு நிராகரித்த பிறகும் குண்டர் சட்டம்


மத்திய அரசு நிராகரித்த பிறகும் குண்டர் சட்டம்:


  • மத்திய அரசு நிராகரித்த பிறகும் பா.ம.க.வினர் மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது : அரசியல் பழிவாங்கலின் உச்சகட்டம் - பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு
           

  • அரசியல் சட்ட உரிமைகளை மதிக்காமலும், பழி வாங்கும் நோக்குடனும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் இருவரை உடனடியாக விடுதலை செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், அவர்களை தமிழக அரசு மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறது. அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத் தக்கது.

  • காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் கிராமத்தைச் சேர்ந்த பழனி , மாரி ஆகிய பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் எந்த குற்றமும் செய்யாத நிலையில் கடந்த மே 14&ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். காஞ்சீபுரம் அருகே பேரூந்தை தீயிட்டு எரித்ததாக அவர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் மத்திய அரசுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் மனு அனுப்பினர். இது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கோரிய மத்திய உள்துறை அமைச்சகம், ஒருவர் மீது தேசிய தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான 11 விதிகளில் ஒன்று கூட இவர்கள் விவகாரத்தில் பின்பற்றப் படவில்லை என்று கூறி, அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை தள்ளுபடி செய்தது. தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்14(2) -ஆவது பிரிவின்படி இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது.

  • இதையறிந்த தமிழக அரசு மத்திய அரசின் ஆணை சிறைக்கு வருவதற்கு முன்பாகவே, பழனி மற்றும் மாரியை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மீண்டும் கைது செய்வதற்கான ஆணையை பிறப்பித்திருக்கிறது. மத்திய அரசின் ஆணை கையில் கிடைக்காத நிலையில் இந்த ஆணையை செயல்படுத்த முடியாது என சிறை அதிகாரிகள் கூறிய பிறகும் தமிழக அரசு அதன் தீவிரத்தை குறைத்துக் கொள்ளவில்லை. மத்திய அரசின் உத்தரவை உடனடியாக சிறை அதிகாரிகளுக்கு பெற்றுக் கொடுத்து விட்டு, புதிய கைது ஆணைகளையும் சிறையில் வழங்கி, அவர்கள் இருவரையும் தொடர்ந்து சிறையில் அடைக்க வைத்திருக்கின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பழி வாங்குவதற்காக சட்டத்தை எப்படியெல்லாம் தமிழக அரசு வளைக்கிறது; மீறுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. பா.ம.க.வுக்கு எதிரான அரசியல் காழ்ப்புணர்ச்சி உச்சகட்டத்தை அடைந்து விட்டது என்பதையே இது காட்டுகிறது. தீவிரவாதம் தலைவிரித்தாடும் ஜம்மு& காஷ்மீரில் கூட கடந்த சில ஆண்டுகளில் 86 பேர் மட்டுமே தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் ஒரே மாதத்தில், ஒரே கட்சியைச் சேர்ந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 122 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை நடைபெறாத ஒன்றாகும்.

  • தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பழனி, மாரி ஆகிய இருவருமே மிகவும் ஏழைகள். இவர்களில் பழனிக்கு திருமணம் ஆகி மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். மாரிக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. இவர்களை நம்பி தான் இவர்களின் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் கைது செய்யப்பட்டதால் இவர்களின் குடும்பங்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.

  • மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சோமேந்திரா என்பவர் தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஒருவர் எவ்வளவு கொடூரமான குற்றத்தை செய்திருந்தாலும், அவரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பது நிரூபிக்கப்படாத வரை அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறது. இவ்வளவுக்கு பிறகும், அப்பாவிகள் இருவரை இரண்டாவது முறையாக தமிழக அரசு கைது செய்திருப்பது மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல் ஆகும். 

  • ஆட்சியாளர்களின் பழி வாங்கும் முயற்சிக்கு அதிகாரிகள் துணை போவதும் கண்டிக்கத்தக்கது. தடுப்புக்காவல் சட்டத்தின்படி ஒருவரை சிறையில் அடைப்பதற்கு முன்பாக அனைத்து ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றங்கள் கண்டிப்புடன் கூறியிருக்கும்போதிலும், அதையெல்லாம் மதிக்காமல் எந்திரத்தனமாக அதிகாரிகள் செயல்படுவது வருத்தமளிக்கிறது. அரசியல்வாதிகள் இன்று அதிகாரத்திற்கு வருவார்கள்; நாளை போய் விடுவார்கள். ஆனால், அரசின் நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். மத்திய அரசு விடுதலை செய்த பிறகும் பழனி, மாரி ஆகியோர் இரண்டாவது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் தான் பொறுப்பேற்க வேண்டும். பா.ம.க.வினருக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு துணை போகும் இத்தகைய அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட உள்ளது. எனவே, அதிகாரிகள் சட்டவிரோத செயல்களுக்கு துணை போவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.